Letterbird இணையத்தில் திறக்கவும்

வழிகாட்டி · 5 நிமிட வாசிப்பு

பேனா நண்பருக்கு என்ன எழுதுவது?

எல்லாவற்றிலும் கடினமானது வெற்றுத் தாள். உலகின் மறுமுனையில் ஒருவரைக் கண்டுபிடித்துவிட்டீர்கள், அவர் உங்கள் கடிதத்துக்காகக் காத்திருக்கிறார், திடீரென்று எதுவுமே தோன்றவில்லை. நல்ல செய்தி என்னவென்றால், முதல் கடிதம் அற்புதமாக இருக்க வேண்டியதில்லை. உங்களைப் போல இருந்தாலே போதும்.

ஓவியம்: மேசையில் பேனா, தேநீர்க் கோப்பைக்கு அருகில் ஒரு கடிதம்

இருக்கும் இடத்திலிருந்தே தொடங்குங்கள்

அறிமுகத்தைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டுத் தலையை உயர்த்திப் பாருங்கள். ஜன்னலுக்கு வெளியே என்ன தெரிகிறது? மழை பெய்கிறதா, பக்கத்து வீட்டு வானொலி சுவர் தாண்டிக் கேட்கிறதா, உங்கள் தேநீர் ஆறிக்கொண்டிருக்கிறதா?

நீங்கள் எழுதும் அந்தக் கணத்திலிருந்து தொடங்கினால், பேனா நண்பரை உங்கள் அறைக்குள் அழைத்தது போல இருக்கும். "இங்கே இரவு ஒன்பது மணி, தெரு ஒருவழியாக அமைதியாகிவிட்டது" என்ற ஒரு வரி எந்தப் பட்டியலையும் விட உங்களைப் பற்றி அதிகம் சொல்லும்.

ஓவியம்: மழை பெய்யும் ஜன்னல், அதன் விளிம்பில் ஒரு செடியும் கோப்பையும்

ஏன் அவருக்கு எழுதினீர்கள் என்று சொல்லுங்கள்

இவரைத் தேர்ந்தெடுக்க ஏதோ ஒரு காரணம் இருக்கும். இருவருக்கும் பழைய திரைப்படங்கள் பிடிக்கலாம், நீங்கள் நெடுநாளாகப் பார்க்க விரும்பிய நகரத்தில் அவர் வசிக்கலாம், அவருடைய சுயவிவரம் உங்களைச் சிரிக்க வைத்திருக்கலாம். அதையே எழுதுங்கள். தங்களிடம் எது கவனத்தை ஈர்த்தது என்று தெரிந்துகொள்ள எல்லோருக்கும் பிடிக்கும்; கடிதத்துக்கும் முதல் வரியிலிருந்தே திசை கிடைக்கும்.

பட்டியல் வேண்டாம், ஒரு சிறு கதை

"எனக்கு 24 வயது, இசையும் பயணமும் பிடிக்கும்" என்று எழுதத் தோன்றும். அதற்குப் பதில் ஒரு சிறு கதை சொல்லுங்கள். "எனக்குச் சமைக்கப் பிடிக்கும்" அல்ல, பன்னிரண்டு விருந்தினர்களுக்கான சாதம் தீய்ந்தும் பரிமாறிய அந்த மாலையைப் பற்றி. கதை எதிரில் இருப்பவருக்குப் பதில் சொல்ல ஏதாவது தரும்; உண்மையான உரையாடல் அங்கிருந்துதான் தொடங்குகிறது.

ஒன்றிரண்டு உண்மையான கேள்விகள் கேளுங்கள்

கேள்விகள் கடிதத் தொடர்பை உயிரோடு வைக்கும், ஆனால் கேள்வித்தாள் அதைக் கொன்றுவிடும். பதிலை உண்மையாகவே அறிய விரும்பும் ஒன்றிரண்டு கேள்விகளைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் ஊரில் ஒரு சாதாரண ஞாயிற்றுக்கிழமை எப்படி இருக்கும்? உங்கள் மொழியில் மொழிபெயர்க்க முடியாத சொல் ஏதாவது உண்டா? இப்போது எனக்கு ஒரு பாடல் அனுப்ப வேண்டுமென்றால் எதை அனுப்புவீர்கள்?

இப்படிப்பட்ட திறந்த கேள்விகள் ஒற்றைச் சொல் பதில்களை அல்ல, கதைகளைக் கொண்டுவரும்.

கற்றுக்கொள்ளும் மொழியில் எழுதுகிறீர்களா?

அப்படியென்றால் முதல் பத்தியிலேயே அதைச் சொல்லிவிடுங்கள். பெரும்பாலானோர் மகிழ்ச்சியாக உதவுவார்கள், கேட்டால் பலர் தவறுகளை மென்மையாகத் திருத்தவும் செய்வார்கள். சிறிய வாக்கியங்களை எழுதுங்கள், தெரிந்த சொற்களைப் பயன்படுத்துங்கள், அகராதியை அருகில் வைத்திருங்கள். அரட்டை ஒருபோதும் தராத யோசிக்கும் நேரத்தைக் கடிதம் தருகிறது.

ஓவியம்: தபால் தலை ஒட்டிய உறையும் ஒரு சிறிய பறவையும்

கதவைத் திறந்து வைத்து முடியுங்கள்

பதில் எழுதுவதை எளிதாக்கும் ஒன்றுடன் முடியுங்கள்: ஒரு கேள்வி, அடுத்த கடிதத்தில் கதையை முடிப்பதாக ஒரு வாக்கு, அல்லது வெறுமனே "உங்கள் வாரம் எப்படிப் போனது என்று சொல்லுங்கள்." பிறகு நீங்கள் பேசுவது போலவே விடைபெறுங்கள்: "கவனமாக இருங்கள்", "சீக்கிரம் எழுதுங்கள்", "மழை பெய்யும் லிஸ்பனிலிருந்து வாழ்த்துகள்".

இப்போதைக்குச் சொல்ல வேண்டாதவை

முழுப் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண், சமூக ஊடகக் கணக்குகள், ஒருவரை உண்மையாக அறியும் வரை காத்திருக்கலாம்; சிலவற்றை எப்போதும் சொல்லாமலே இருக்கலாம். Letterbird இந்த விவரங்களை யாருக்கும் காட்டாது, 13 முதல் 17 வயது உறுப்பினர்கள் தங்கள் வயதினருக்கு மட்டுமே எழுதுவார்கள். ஒரு கடிதம் சரியில்லை என்று தோன்றினால், ஒரே தட்டலில் அனுப்புநரைத் தடுத்துப் புகாரளிக்கலாம்.

ஓவியம்: உலகைச் சுற்றிப் பயணிக்கும் ஒரு கடிதம்

உங்கள் முதல் கடிதம் காத்திருக்கிறது

Letterbird-இல் கடிதம் சேர சில மணிநேரம் ஆகும், எனவே அவசரம் இல்லை, "தட்டச்சு செய்கிறார்…" என்று எதுவும் உங்களைக் கண்காணிக்காது. எழுதுங்கள், ஒருமுறை மீண்டும் படியுங்கள், உறையையும் தபால் தலையையும் தேர்ந்தெடுங்கள், பிறகு அதைப் பயணத்துக்கு அனுப்புங்கள்.

Letterbird iPhone, Android மற்றும் உலாவியில் இலவசம்.

கணக்கு இல்லாமல் ஒருவருக்கு எழுத வேண்டுமா? letterbird.me-ஐ முயற்சி செய்யுங்கள்.